அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

கைகோர் தமிழா கைகோர்...!


கைகோர் தமிழா கைகோர்
கைகோர் தமிழா கைகோர்
இந்த பூமியில் வாழ கைகோர்.
தூய தமிழனாய் வாழ கைகோர்

உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.
அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.
நிலம் இன்றி அகதியாய்
சிறுபாண்மை சின்னமாய் நாங்கள்

மூத்தவர் ஆண்டு சென்றுவிட
வந்தவர் நாம் மெளனியாய்
அடிமையாய் தொடர்கின்றோம்
எட்டு கோடியாய் உள்ளோம்
எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்
பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்
சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம்

தொழுது நாம் வாழ்ந்த கோவில்
அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று
சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து
சாகிறான் தமிழன் தினமும்
நிலாச் சோறு உண்ட முற்றம்
அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம்
மெல்ல வருடிய தென்றலில்
நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல்
இன்பமாய் விடிந்த காலை
கொலையும் களவுமாய் விடிகின்ற நாட்கள்
செம்மொழி பேசினால் தமிழன் சிறையில்
எண்ணிடும் நாட்கள்

வடக்கிலும் கிழக்கிலும் வாழ் நாள்
முண்டமாய் பைக்குள்
வீதியில் பிஞ்சு குழந்தைகள் முன்னே
இரத்த வெள்ளத்தில் தந்தை
பெற்ற தாய்க்கு முன்னே துப்பாக்கி
குண்டேந்தி தனையன்
தெய்வமாய் போற்றும் பெண்கள் தம்
வாழ்க்கையை தொலைத்த பின் தனியே
கூடவே சுற்றிய நண்பன் கோணிப்பைக்குள் பிணமாய்
புத்தக பையுடன் சென்ற சிறிதொன்று
கிணற்றுக்குள் பிணமாய்
மண முடித்து ஆறாம் நாள் காணாமல்
போன கணவன்

தமிழுக்கு வாலாட்டிய நாய்க்கு
துப்பாக்கி ரவையே பரிசாம்
இன்னும் வெறுமையாய் ஏன் ஒதுங்கி ஓடுகிறாய்
இழப்பையே இருப்பாக்கி மெளனியாய் தொடர்கிறாய்.??
மரம் வெட்ட தடையுண்டு தமிழனை வெட்டபரிசு உண்டாம்.

வன்னியின் வான் பரப்பில் வல்லூறு எச்சங்கள்
அதிகாலையில் ஆனந்த பறவையின்
குரல் கேட்டு கண்விழித்தோம்
ஆனால் இன்று இடியாய் அதிரும் பல்குழல்
ஒலி கேட்டு தேடுகிறோம் பதுங்குகுழியை

கண்சிமிட்டும் நட்சத்திரத்தை
கண்சிமிட்டாமல் பார்த்திருந்தோம்....
ஆனால் இன்று கண்சிமிட்டும் நேரத்தில்
வான் இயந்திரத்தின் வக்கிர தேசமாய் மாறும்
காலாற நாம் நடந்த வயல் காடு கண்ணிவெடி
விளையும் வயலாய் இன்று
நெல்லரிசி சோறுமாய் ஒடியல் பிட்டுமாய்
உரம் ஏற்றிய உடம்பு புழுப்பிடத்த அரிசிக்காய்
நீண்ட வரிசையில் நடு வெயிலில்

குருவிக்கு கூட கூடு உண்டு தமிழா
உன் பிஞ்சுக்கு நாடு உண்டா.?
பாதச்சுவட்டை பதித்திடு ஒரு திசையிட்டு
கைகளை நீட்டி கைகோர்த்து வந்திடு
புள்ளியாய் உள்ள மண்ணை புனிதமாய் காத்து
புதுயுகம் படைக்க புலியாக புறப்படு தமிழா.....

svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini